கவிதை – மாணவர்கள்

students - கவிதை

students - கவிதை, For image, thanks to மணிவர்மா கோ.

ஆட்டோ நெரிசலில் சிக்காத
ஆதிகாலத்து
மாணவர்கள் இவர்கள்!

கழுத்தில்
தூக்குக் கயிறு தொங்காத
சுதந்திரப் பறவைகள்!

தார் கொட்டாத தரையிலே
‘நட’ராஜா பஸ்தான்
தினந்தோறும்!

சிக்னல் சிக்கலில்லை
தட்டானைத் தவிர
குறுக்கே ஏதும் வந்ததில்லை!

சட்டையை
‘இன்’ பண்ணத் தேவையில்லை
டவுசர் கிழியாதவரை!

மாட்டுக்குத்தான் லாடம்,
பசுமை பூத்த பூமியில்
செருப்பு கூட பாரம்!

புத்தகப்பையிலே
ஜவுளிக்கடை விளம்பரம்
போன பொங்கலை நினைவுபடுத்தியபடி!

– வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்