பேய் ஓட்டும் ஊழியர்கள் கவனத்துக்கு…

I got this mail as forward … but people has to think about this ….

சில ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து சிங்கப்பூர் வந்த மிகப் பிரபல ஊழியர் ஒருவரின் விளம்பர சிடி பார்த்தேன். அதில் அவரது பேய் விரட்டும் வீரதீரப் பிரதாபங்கள் காட்டப் பட்டிருந்தன. அவரது மேடையில் பிசாசால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் போட்ட ஆட்டம் பார்க்க மிகப் பரிதாபமாக இருந்தது. அவர்களை வைத்து குரங்காட்டி வித்தை காட்டுவதுபோல அந்தப் பிரசங்கியார் அவர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தார். அவர்களில் எத்தனை பேர் விடுதலை ஆக்கப்பட்டார்களோ தெரியவில்லை.

இன்று இந்தியாவிலும் அதே நிலைதான். இந்தியாவில் இன்று கிறிஸ்தவ தொலைக்காட்சிகள் பெருகிவிட்ட நிலையில் அநேக ஊழியர்கள் தங்கள் பேய் விரட்டும் சாகசக் காட்சிகளை தொலைக் காட்சிகளில் காண்பித்து தங்களை மார்க்கெட்டில் நிலைநிறுத்திக் கொள்ள பிரயாசப்படுகிறார்கள்.

ஆண்டவராகிய இயேசு இந்தக் காரியத்தை எப்படி அணுகினார் என்று ஆராய்ந்தேன். அவரும் ஜனங்கள் கூடியுள்ள பொது இடங்களில் வைத்தே பிசாசுகளைத் துரத்தினார் இதில் சந்தேகம் இல்லை (மாற்கு 1:23-27, மாற்கு9:17-27). எப்பொழுதும் அவரைச் சுற்றி ஜனக்கூட்டம் இருந்தபடியால் அது தவிர்க்கக் கூடாததாயிருந்தது. ஆனால் இயேசு அந்த அற்புதங்களை தனது ஊழிய விரிவாக்கத்துக்காகப் பயன்படுத்தினாரா என்றால் நிச்சயமாக இல்லை.

ஒருவேளை இயேசு இன்று இருந்திருந்தால் ஒரு கேமராமேனைக் கூடவே வைத்துக் கொண்டு அற்புதக்காட்சிகளையெல்லாம் படமாக்கி, தொகுத்து ஒரு டிவிடி தயாரித்து அதைத் தனது விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பாரா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர் தனது ஊழிய வெற்றிக்கு பிதாவைத்தான் சார்ந்திருந்தாரேயொழிய வேறு எந்த மனித முறைமைகளையும் சார்ந்து கொள்ளவில்லை.

இந்த விஷயத்தில் பெரும்பாலும் பாதிக்கப் படுவது அப்பாவி கிராமத்து நடுத்தரவர்க்கப் பெண்களே!

பேய் ஓட்டும் காட்சியை வைத்து மார்கெட்டிங் செய்யும் ஊழியர்களே! அப்பாவிப் பெண்கள் மாராப்பு விலகிய நிலையில் தலைவிரி கோலத்தோடு அலைகழிக்கப் படும் அலங்கோலக் காட்சியைக் பகிரங்கமாகக் காட்டி விளம்பர ஆதாயம் தேட முனையும் வியாபார வித்தையை எந்த ஆண்டவரிடத்தில் அல்லது அப்போஸ்தலரிடத்தில் கற்றீர்கள்??? தேவபயம் வேண்டாம் குறைந்தபட்ச மனிதாபிமானமாவது வேண்டாமோ!!

அந்த அப்பாவிப் பெண்ணுக்கும் சுயகவுரவம் என்று ஒன்று உண்டு என்பதை ஒரு வினாடி சிந்தித்துப் பார்த்தீர்களா? அவள் ஒருவேளை ஒரு கல்லூரி மாணவியானால் அவள் தனது அலங்கோலக் காட்சியை ஊரே தொலைக்காட்சியில் பார்த்திருக்க எந்த முகத்தோடு கல்லூரிக்குப் போவாள்?? அண்டை அயலார் முகத்தில் எப்படி விழிப்பாள்?? அடுத்தவர் சுயமரியாதையைச் சுரண்டி ”தான்” கனப்படுவது எந்தவகையில் ஆவிக்குரியதாகும்?

கேள்வி: என்ன பிரதர்! நம்ம ஊழியக்காரர் அந்தப் பெண்ணைப் பிசாசு பிடியிலிருந்தே ஜெபித்து விடுதலையாக்கி இருக்கிறாரு அதை விட்டுட்டு சுயகவுரவம், அவமானம்னு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கீங்களே??? இதுமூலமா பாஸ்டருக்கு விளம்பரம் கிடைக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும். அது மூலமா ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுதுல்ல??? இந்தக் காட்சியப் பார்த்து எத்தனை பேருக்கு விசுவாசம் வளரும்! அவிசுவாசிகள்கூட இதப் பார்த்துட்டு ஆண்டவர்கிட்ட வர வாய்ப்பிருக்கே! உண்மையச் சொல்லப்போனால் அந்த டிவியில் காட்டப்பட்ட பிசாசு அலைக்கழித்த சகோதரி ஒரு வகையில கர்த்தருக்கு ஊழியம்தான் செய்து இருக்காங்க. அதுனால அவங்களுக்கு ஆசீர்வாதம்தான் கிடைக்கும். நீங்க என்னமோ புதுசு புதுசா குழப்புறீங்களே!!!

பதில்: உண்மைதான் பிரதர்! அந்த சகோதரிகள் விடுதலையாகியிருந்தால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! விடுதலை செய்யத்தான் நம்மைக் கர்த்தர் இந்த பூமியில் வைத்திருக்கிறார். ஆனால் அதற்குப் பின்னால் நீங்கள் சொன்ன எல்லாமே தவறு. நவீன கிறிஸ்தவம் உங்களுக்கு இப்படி வேதத்துக்குப் புறம்பான காரியங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

சரி! நீங்கள் சொல்வதே சரியாக இருந்தாலும், அந்த ஊழியக்காரருக்கு அதே வயதில் ஒரு கல்லூரி செல்லும் மகள் இருந்து அவளுக்கு பிசாசு பிடித்திருந்தால். அந்தப் பிசாசு நீங்க வேண்டுமென்று அவர் அந்தரங்கத்தில் தேவனை நோக்கிக் கதறுவாரா? அல்லது ஆண்டவருடைய நாமம் மகிமைப் படட்டுமே என்று அவளுக்கு பிசாசு ஓட்டி அது அலைக்கழிக்கும் காட்சியை வீடியோவில் படமாக்கி அதை ஊரே பார்க்கும்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவாரா???? ஏன், அவர் தன் சொந்த மகளைக் கொண்டு ஆண்டவரை மகிமைப்படுத்தக் கூடாதா?

டி.வி நிகழ்ச்சியில் தனது சொந்தப் பிள்ளைக்கு நேர்த்தியாய் உடைஉடுத்தி பாடல் பாடச்செய்து அந்தப் பாடலை தனது பிரசங்க நேரத்துக்கு முன்னால் ஒளிபரப்பி அழகுபார்க்கும் ஊழியர், யாரோ ஒருவர் பெற்ற ஒரு பெண்மகள் பேய்பிடித்து ஆடும் அலங்கோலக் காட்சியை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தி கொள்வதுதான் கிறிஸ்தவ அன்பா? இப்படி தனது நாமம் மகிமைப் படுவதை ஆண்டவர் விரும்புவாரா?

“மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம் (மத் 7:12). என்று வேதம் ஆணியறைந்தாற்போல சொல்லுகிறது. ”உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி” என்ற பிரதான கற்பனை இங்கு முற்றிலுமாக அடிபட்டுப் போகிறது.

சம்பந்தப்பட்ட பெண்கள் அந்த ஊழியக்காரரை அணுகி ஏன் எனது படத்தை இப்படிக் காட்டுகிறீர் என்று கேட்கவும் முடியாது. கேட்டால் ஆண்டவருடைய காரியத்துக்கு பயன்படுத்துகிறோம் அதைப் போய் கேள்வி கேட்கிறாயே என்று சொல்லி Spiritual Blackmail செய்வார்கள். இதேநேரம் மேல்தட்டு பெண்களாயிருந்தால் மானநஷ்ட வழக்கு போட்டு கோர்ட்டுக்கு இழுத்துவிடுவார்கள். ”நம்ம பட்டிக்காட்டுப் பொண்ணுங்கதானே அதுங்க என்ன செய்யும் என்ற தைரியம்”

பிசாசை வைத்து தன்னை மகிமைப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு பலர் இன்று துணிகரம் கொண்டுவிட்டார்கள். மதுரையில் உள்ள ஒரு பேர்போன பேய்விரட்டும் ஊழியர் கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அவர் ஒரு பிசாசு பிடித்த பெண்ணின் தலையில் கைவைத்து “ஆடு…ஆடு” என்று கட்டளை கொடுக்கிறார், பிசாசைப் பார்த்து ”ஓடு…ஓடு” என்றல்லவா கட்டளையிட வேண்டும்!!! அது ஆடினால் பலருடைய கவனம் ஈர்க்கப்படும், தன் மீது சபையாருக்கு உள்ள பயம் அதிகரிக்கும், தன் புகழ் ஓங்கும். தன்னை எல்லோரும் துடைத்துப் போடுகிற அழுக்காக பாவித்துக் கொண்ட பவுல் எங்கே? இவர்கள் எங்கே?

நான் ஆவிக்குரிய சபைகளுக்கு எதிரானவன் அல்ல. நானும் பெந்தேகோஸ்தே பின்னணியிலிருந்து வந்தவன்தான், பெந்தேகோஸ்தே அனுபவம் (அப்போஸ்தலர் 2) இல்லாத கிறிஸ்தவம் எப்படி ஆபத்தானதோ, அதுபோலவே கிறிஸ்து இல்லாத பெந்தேகோஸ்தேயும் அபாயகரமானது. அடிமையின் வேண்டுகோளுக்கு செவிகொடுத்து அப்பாவி, பாமர மனிதர்களை நேசியுங்கள். அவர்களை கனம் பண்ணுங்கள். ”ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்” என்று நீதிமொழிகள் 17:5 எச்சரிக்கிறது.

முடியாவிட்டால் தயவுசெய்து குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு அந்த பெண்களுடைய முகத்தை Video Editing-இல் மறைக்கவாவது முயலுங்கள்.

Advertisements